ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது.
இந்த வழக்கில் கடந்த அமர்வில், ‘ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்ற வாதத்தை வைத்த தமிழக அரசு, ‘ஜல்லிக்கட்டு பொழுதுபோக்கு போட்டி இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் காளைகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வேண்டும். 18 மாதம் முதல் ஆறு வயது உடைய காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். அதன் பின்னர் அதனை வீட்டில் வளர்ப்பார்கள். வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் இங்கே கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. அதை துன்புறுத்தல் என்று கூற முடியாது.’ என வாதத்தை எடுத்து வைத்தனர்.
அதற்கு நீதிபதிகள், 'ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்து விடும்போது அதனை அடக்க பலர் பாய்கிறார்களே?' எனக் கேள்வி எழுப்பினர்.
'பலர் பாய்ந்தாலும் ஒருவர் காளையின் திமிலைப் பிடித்தவுடன் மற்றவர்கள் விட்டு விடுவார்கள். ஒருவர் மட்டுமே காளையைப் பிடிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை ஒரு காளையைப் பிடிக்க ஒருவருக்கு மேல் பலர் முற்பட்டால் அந்த நபர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர். இது காலம் காலமாக எழுதப்படாத விதி. அது கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது' எனத் தமிழக அரசு தனது பதிலை தெரிவித்தது.
'ஒருவர் மட்டுமே காளையைப் பிடிப்பார்கள் என எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கில், 'சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு. ஒரு கலாச்சாரத்தை காப்பது அந்த அரசுகளின் கடமை. கலாச்சாரத்தை காப்பது தமிழக அரசின் கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட. கலாச்சார அடையாளம் என்பதால் பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஜல்லிக்கட்டை காண வருகின்றனர்' என்ற வாதத்தை எடுத்து வைத்துள்ளது தமிழக அரசு.