ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டாகும். மதுரை மாவட்டத்தில் தைப் பொங்கலை முன்னிட்டு, தை 1, 2, 3 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமாக நடக்கின்றன. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி “அலங்காநல்லூர் அருகே பிரம்மாண்டமாக அமைக்கப்படும் அரங்கில் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி போன்ற ஊர்களில், கோவில் திருவிழாக்களின் போது, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துகின்றனர். தற்போது கொரோனா சூழலால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, நரிக்குடி – பள்ளப்பட்டி கிராமத்தில் ஸ்ரீஅய்யனார் - ஸ்ரீஅரிய சுவாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை விமரிசையாக நடத்தியுள்ளனர்.
இங்கு நடந்த விறுவிறுப்பான போட்டிகளில் கலந்துகொள்ள, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 400 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. போட்டி நடந்தபோது, 353 காளைகள் பங்கேற்றன. 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட, 150 மாடுபிடி வீரர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்ட இப்போட்டியானது, ஒரு மணி நேரத்துக்கு 25 வீரர்கள் என 6 சுற்றுகளாக நடந்தன. வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.