ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம்
அரசு அலுவலகங்கள், பள்ளிகள் முடங்கின
புதுக்கோட்டை, ஆக.22- தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டே-ஜியோ) சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவங்கள் முற்றிலுமாக முடங்கியது.
தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் வழங்க வேண்டும்.. சிறப்புக் காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊழியங்களைக் ஒழித்து அனைத்து ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டே-ஜியோ) சார்பில் பலகட்டப் போராட்டங்களை நடைபெற்று வருகிறது.
அதன் ஓருபகுதியாக செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டதில் மாவட்ட ஆட்சியரகம், தாலுகா அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரையிலான அனைத்துக் கல்வி நிலையங்களின் பணிகள் முற்றிலுமாக முடங்கியது. அலுவகங்களில் ஓரிரண்டு உயர் அலுவலர்களும் பள்ளிகளில் கல்வியியல் கல்லூரியிலிருந்து பயிற்சிக்கு வந்த மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இதன் காரணமாக வேலைநிறுத்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தல் முழுமையாக வெற்றியடைந்தது.
வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி மாவட்டத்தின் அனைத்து தாலுகா தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிர்வாகிகள் கு.திராவிடச் செல்வம், கே.நாகராஜன், ஆ.கனகமுத்து, கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில நிர்வாகிகள் சாமி.சத்தியமூர்த்தி, என்.ரெங்கராஜன், கு.கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ரெங்கசாமி, அ.மணவாளன், ராமச்சந்திரன், தமிழ்மணி, கு.சத்தி, சுபாஷ்சந்திரபோஸ், ரெங்கராஜ், இந்திராணி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
-இரா. பகத்சிங்