ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கல்வியாளர்கள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.. ‘’9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்காகப் போராடிய அரசு ஊழியர்களை, ஊதியம் உயர்த்திக் கேட்கிறார்கள் என்னும் பிரச்சாரத்தின் மூலமாகவும், கைது நடவடிக்கை மூலமாகவும் தமிழக அரசு போராட்டத்தை ஒடுக்க நினைத்து, போராட்டமும் தற்காலிகமாக கைவிடப்பட்ட எல்லோரும் பணிக்குத் திரும்பியுள்ள சூழலில் 30 ம் தேதியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வரவில்லை எனக் காரணம் சொல்லி, அவர்களை பணியில் சேர அனுமதிக்க மறுப்பது என்பது வருத்தத்திற்குரிய செயலாக இருக்கிறது.
பணியில் சேர அனுமதிக்க மறுப்பதோடு, அவர்களுக்கு மாற்றுப்பணி ஆணையும் வழங்கிட முயற்சி செய்வது, அதுவும் தேர்வு நெருங்கியுள்ள நேரத்தில் என்பது தவிர்க்க வேண்டிய அம்சமாகும். 2018 ம் ஆண்டில் குறிப்பிட்ட இயக்குநரின் ஆணையையும், ஆசிரியரின் விண்ணப்பக்கடிதம் என்கிற பதத்தையும் பயன்படுத்தி, 27.1.2019 ம் நாளைய இயக்குநரின் உத்தரவை மேற்கோள் காட்டி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
பணிக்குத் திரும்பியுள்ள ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் தவிர்க்கப்படும் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், கல்வித்துறை உயரதிகாரிகள் புகார்களுக்கு ஆளாகியுள்ள சூழலில் கல்வித்துறையில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிக்குத் திரும்ப விருப்பத்துடன் வந்துள்ள ஆசிரியர்களை மீண்டும் பந்தாட நினைப்பது, ஒவ்வொரு பள்ளியிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், மீண்டும் ஆசிரியர்களை உடனடிப்போராட்டத்திற்கு தூண்டுகின்ற செயலாகவே பார்க்க முடிகின்றது.
தேர்வு நெருங்கும்பொழுது போராட்டம் எவ்வாறு கூடாதோ! அதுபோல பணியிட மாற்றமும் கூடாது. இரண்டுமே மாணவர்களைப் பாதிக்கும். தீர்வுகள் இல்லாத பிரச்சினை என்று எதுவும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, நல்ல முடிவெடுத்து, அரசும், அரசு ஊழியர்களும் வேறில்லை என்ற ஒற்றுமையான மனப்பான்மையோடு , இதில் அரசியல் கலந்திட வாய்ப்பளிக்காமல் , நடவடிக்கைக்குள்ளான அனைத்து ஆசிரியர்களையும் எவ்வித பாரபட்சமுமின்றி , அவர்கள் மீதான நடவடிக்கைகளையும் உடனே ரத்து செய்து, உடனடியாக அவரவர் பணியிடங்களில் சேர்ந்திட வழிசெய்து, தமிழக முதல்வர் ஒரு நல்ல முடிவை மிக விரைவில் அறிவிக்குமாறு கல்வியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.