நெல்லை மாவட்டத்தின் கங்கை கொண்டான் அருகே மான்களின் பாதுகாக்கப்பட்ட வனச்சரணாலயம் உள்ளது. அங்கு அரியவகை மான்களும் உள்ளன. மாவட்டத்தை அடுத்த ஆலங்குளம் அருகிலுள்ள ராமர் கோவில் மலை மற்றும் சுப்பையாபுரம் மலைப்பகுதிகளில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. தற்போது மலைப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக இரைக்காகவும், தண்ணீருக்காகவும் மான்களின் கூட்டம் சமவெளி வயல் பகுதிகளுக்கு வருவதுண்டு. இதனால் அவைகளுக்கு போதிய தண்ணீர் வசதி செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வனத்துறையினரிடம் வைக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே வழக்கம் போல் தண்ணீருக்காக 7 மான்கள் அப்பகுதிக்கு வந்திருக்கின்றன. காற்றாலைகளைக் கொண்ட அப்பகுதியில் காவலுக்காகவும் வேட்டைக்காகவும், வேட்டை நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் சொல்லப்பட்டது. சமவெளி வயல் பகுதிகளுக்கு வந்த 7 மான்களையும், அந்தப் பகுதியின் சுமார் 40- க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் சுற்றி வளைத்து கடித்துக்குதறியுள்ளன. சத்தம் கேட்டு அருகிலுள்ள மக்கள் ஒடி வந்து நாய்களை விரட்ட அதற்குள்ளாக 4 மான்கள் இடத்திலேயே சம்பவ மரணமடைந்ததுள்ளன. மீதமுள்ள மான்களையும் வீராணம் வரை விரட்டிச் சென்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த கோவில் பாண்டி, தசரதராமன் உள்ளிட்ட வனக்காப்பாளர்கள், பலியான மான்களை மீட்டனர். கால் நடை மருத்துவர்களான ராம் செல்வம், சந்திரன், இறந்த மான்களை உடற்கூறு ஆய்வு செய்த போது, அதில் இறந்த 4 மான்களில் மூன்று மான்கள் கர்ப்பிணி என தெரிய வர பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு அவைகள் அங்கேயே புதைக்கப்பட்டன. மான்கள் மனித இனத்தைப் போன்று பாதுகாக்கப்பட வேண்டியவைகள். அவைகளுக்குரிய அத்தியாவசியப் பணிகள் செய்து தரப்பட்டிருக்கப்படுமேயானால் இது போன்றதொரு கொடுமை நடந்திருக்குமா என ஆதங்கப்பட்டனர் வீராணம் வாசிகள். மனித உயிர் தான் என்பது குறியல்ல. எந்த ஒரு உயிரினத்திற்கும் பாதுகாப்பு அவசியம்.