மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திண்டுக்கலில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ‘’தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார்கள். அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ போராட்டக் குழு கடந்த நான்கு நாட்களாக போராடி வருகிறது.
தமிழக அரசு உடனடியாக போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். மாறாக போராட்டத்தை உடைப்பதற்காக தவறான பாதையில் மாநில அரசு செல்கிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மிரட்டும் வகையில் நோட்டீஸ் கொடுப்பதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மட்டும் 7,500 ரூபாய் சம்பளத்திற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு காரணம் மாநில அரசுதான். கடந்த நவம்பர் மாதத்தில் ஜாக்டோ ஜியோ இணைந்து டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக நவம்பர் மாதமே அறிவித்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க மூன்று முறை போராட்டத்தை ஒத்திவைத்தனர். ஆனால் நீதிமன்றத்தில் அரசு எந்தவித உருப்படியான ஆலோசனைகளையும் வழங்கவில்லை. கடைசியாக நீதிபதியே உங்கள் போராட்டத்தை தொடருங்கள் என்று சொல்லிவிட்டார். மாணவர்களின் கல்வி உட்பட அனைத்து பாதிப்புகளுக்கும் தமிழக அரசுதான் பொறுப்பாகும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி அந்த மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர்கள் உள்ளனர். எனவே மாநில அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.