பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (04.02.2021) கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வேலூரில் இருக்கக்கூடிய திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டமான கள்ளக்குறிச்சி மற்றும் ஏற்கனவே உள்ள கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் கல்லூரிகள் எல்லாம் ஒன்றாக இணைத்துப் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். அந்தப் பல்கலைக்கழகம் சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் பெயரில் உள்ள இரண்டாவது பல்கலைக்கழகம் ஆகும். ஏற்கனவே நாகையில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் ஒன்று ஜெயலலிதா பெயரில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் உயர்கல்வி துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. அந்த அரசாணைக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.