Skip to main content

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஜெ.அன்பழகன் உடல்நிலை மோசமடைந்துள்ளது!!! -ரேலா மருத்துவமனை அறிக்கை

Published on 08/06/2020 | Edited on 08/06/2020
J-Anbazhagan




தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுகவின் ஒருங்கிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார். இதனையடுத்து, ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளையொட்டி செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். 

 

j anbazhagan


 

இந்தநிலையில் கடந்த 2ஆம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா இன்ஸ்டிட்யூட் அண்ட் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அந்த தனியார் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். 

 

j anbazhagan


 

ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். 
 

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை மருத்துவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து வித உதவிகளையும் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது எனத் தெரிவித்தார்.
 

j anbazhagan




கடந்த 6ஆம் தேதி மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி ஜெகத் ரட்சகன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ஜெ.அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். 
 

இந்தநிலையில் திங்கள்கிழமை ரேலா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 2ஆம் தேதி ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, 3ஆம் தேதி அவருக்கு வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்டது. தொடக்கத்தில் 90 சதவிகித ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. பின்னர் அடுத்த இரணடு நாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து அவர் படிப்படியாக வென்டிலேட்டரிலிருநது வெளியே கொண்டுவரப்பட்டார்.


எனினும் திங்கள்கிழமை மாலை முதல் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடையத் தொடங்கியது. அவரது இதய செயல்பாடு மற்றும் ரத்த அழுத்தம் சீரற்று உள்ளது. சிறுநீரக செயல்பாடும் மோசமாக உள்ளதாக தெரிவித்து உள்ள மருத்துவமனை நிர்வாகம், ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவர் கவலைக்கிடமாக உள்ளார் என தெரிவித்துள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்