இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கக் காத்திருக்கிறது. இந்நிலையில் மதுரையில் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் 'நீங்கள் அதிமுக கொடிய பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், ''அதிமுக கொடியை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என்றுதான் தீர்ப்பு வந்திருக்கிறது. தொண்டர்கள் அல்ல. நீங்கள் தொண்டர்களின் வேகத்தை பார்த்தீர்கள் அல்லவா... உணர்வுகளை பார்த்தீர்கள் அல்லவா... ஏற்கனவே நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நாங்கள் அதிமுக ரத்தம். இந்த ரத்தத்தை மாற்றுவதற்கு தீர்ப்பு வழங்க முடியுமா?
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே அங்கம் வகிக்கின்றோம். கூட்டணியில் தான் நாங்கள் நிற்கிறோம். பிரதமர் மோடி பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்திருக்கிறார். என்றும் அவர்தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று எங்களுடைய அனைத்து நிலைகளிலும் ஆதரவு தருகிறோம். அவர்தான் பிரதமராக வரவேண்டும் என்று எண்ணத்தில் செயல்படுகிறோம். தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக வழங்கப்பட்டது. அது தற்காலிக தீர்ப்பு. உறுதியாக எங்களுடைய தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என உரிமை கோர முடியும். அந்த உரிமையின் அடிப்படையில் நாங்கள் இரட்டை இலையை கேட்போம். எங்களுக்கு தான் தருவார்கள். கூட்டணிக் கட்சிகள் எங்களிடம் பேசி வருகிறார்கள். அதன் வெளிப்பாடு சில நாட்களில் தெரிய வரும்'' என்றார்.