தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மதுரையில் கரோனா தீ போல பரவி வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதன் பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள், ''மத்திய அரசுடன் முரண்படாமல் இணக்கமாக சென்று அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்'' என்றனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ''மதுரையை பொருத்தவரை கரோனா என்பது தீயைப் போல பரவுகிறது. புயல் வேகத்தில் பரவுகிறது. இதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. என்ன காரணம் என்பதை அரசாங்கம் கண்டறிய வேண்டும். குறிப்பிட்ட அளவுதான் தடுப்பூசி கொடுக்கிறார்கள். அதையும் இந்த அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து செயல்பட வேண்டும். சத்தான உணவினை நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.