காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி., நேற்று (22/08/2021) தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இது தொடர்பாக, ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டப் பகுதிகளில் தொழிற்பூங்காக்கள், சித்தன்னவாசல், குடுமியான்மலை வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு, மேம்பாடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தேன். தொழிற்துறை அமைச்சரே கலாச்சாரத்துறை அமைச்சராக இருக்கும் ஆபூர்வம்!
மணப்பாறையில் விவசாய தொழிற்பூங்கா அறிவித்துள்ளதற்கு எனது தொகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தேன். மூடிக் கிடக்கும் மாயனூர் ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலையை மறுசீரமைப்பு செய்வது, புகழூர் 'TNPL' காகித ஆலை நிர்வாக சீர்திருத்தம், தொழிலாளர் நலம், சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி விரிவாகப் பேசினோம்.
எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள். மரங்கள் நிறைந்த அழகிய சூழலில் அமைந்துள்ள அந்த எளிய வீடு கொள்ளை அழகு!" என்று குறிப்பிட்டுள்ளார்.