அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில், தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி பேசுகையில், அறிவியல் கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானது என்றும் உலகை ஆளும் சக்தி மிக்கது என்றும் குறிப்பிட்டார். சர்.சி.வி.ராமனுக்குப் பிறகு இந்தியாவிற்கு அறிவியல் துறையில் நோபல் பரிசு கிடைக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலக அளவில் இந்தியாவின் பெயரை ஒளிரச்செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
சமீப காலமாக உலக அளவில் தொழில் நுட்பத்துறைக்கு இருக்கும் வரவேற்பு அறிவியல் துறைக்கு இல்லாதது குறித்த கவலையை வெளிப்படுத்தினார். தற்போது, உலகம் முழுதும் பயன்படுத்தும் செல்ஃபோன் வளர்ச்சியையும் அதன் கண்டுபிடிப்பின் மூலம் பல்வேறு கருவிகளின் வேலையை ஒரே ஒரு செல்ஃபோன் மூலமே செய்து கொள்ளும் வசதியை நாம் பெற்றுள்ளதை அறிவியல் வளர்ச்சி எனக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் ஞானதேவன் அனைவரையும் வரவேற்றார். பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் சீனிவாசன், வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் விவசாயத்துறை தலைவர் கதிரேசன் உள்ளிட்ட பேராசிரியர்கள் 6 பேருக்கு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீட்டிற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், 19 பேராசியர்களுக்குப் பல்வேறு பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
கடல்வாழ் உயிரின உயராய்வு மைய்யத்தில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கிப் பாராட்டப்பட்டது. அறிவியல் புல முதல்வர் நிர்மலா ரட்சகர் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு புல முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, மேடையில் அறிவியல் மேதை சர்.சி.வி. ராமன் படத்திற்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.