நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அண்மையில் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்திய நடிகர் விஜய் 'திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள்' என பேசி இருந்தார். இதற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பின.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக இதனை விமர்சித்து பேசி இருந்தார். நவம்பர் 1 அன்று தமிழ்நாடு நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ''திராவிடம் என்பது வேறு தமிழ் தேசியம் என்பது வேறு. தமிழ் தேசியத்திற்கு நேர் எதிரில் எதிரானது திராவிடம். இரண்டும் எப்படி ஒன்றாகும்.இந்த நிலத்தை கெடுக்கும் நச்சு ஆலைகளை ஸ்டெர்லைட், மீத்தேன், ஈத்தேன் என எல்லா நச்சு திட்டங்களையும் திராவிடம் அனுமதிக்கும். நிலத்தின் வளத்தை பாதுகாக்க தமிழ் தேசியம் துடிக்கும். எதிர்த்து போராடும். இரண்டும் ஒன்றா? எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ் தேசியம். திராவிடம் தமிழை திட்டமிட்டு அழிக்கும். இரண்டும் ஒன்றா? தமிழ் பிள்ளைகள் படிக்க வேண்டும். கல்வி என்பது மானிட உரிமை கொடுக்க வேண்டியது அரசின் கடமை, இது தமிழ் தேசியம். இந்த நாட்டு குடிமக்கள், பள்ளி, கல்லூரி போகின்ற மாணவர்கள், உழைப்பவர்கள் எல்லோரும் குடிக்க வேண்டும் இது திராவிடம். இரண்டும் ஒன்றா? எப்படி ஒன்றாகும்?'' என பேசியிருந்தார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வணிகர் சங்க பேரவை தலைவர் மறைந்த வெள்ளையனின் படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட விசிகவின் திருமாவளவன் பேசுகையில், ''மேடை கிடைக்கிறது என்பதற்காகவும் தொலைக்காட்சி கிடைக்கிறது என்பதற்காகவும், சமூக ஊடகங்கள் இருக்கின்றன என்பதற்காகவும் தன் விருப்பம் போல் ஆளாளுக்கு நஞ்சை கக்கிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்கிற அரசியலில் இருந்து தான், திராவிடம் என்கிற கருத்தியலில் இருந்து தான் தமிழ் பாதுகாப்பு இருக்கிறது. தமிழ் தேசியம் என்ற அரசியலும் இன்று வளர்ந்து இருக்கிறது.
பூவில் இருந்து காய் என்கிறோம். காயில் இருந்து கனி என்கிறோம். அதைப் போலத்தான் பூ இல்லாமல் காயில்லை. காயில்லாமல் கனியில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என நாம் இந்திய அளவில் போராடுகிறோம். அதைப்போல திராவிடம் என்ற கருத்தியலை பாதுகாக்க வேண்டியது திமுகவின் பொறுப்பு மட்டுமல்ல, நம்முடைய பொறுப்பும். நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. தமிழ் உணர்வுள்ள ஒவ்வொருவரின் பொறுப்பு'' என்றார்.