“நாகரிகம் பெற்ற சமுதாயத்தால் தான் இரும்பை பயன்படுத்துவது குறித்து சிந்திக்க முடியும். 4200 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இரும்பை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே தமிழர் நாகரிகம் தோன்றியிருக்கக் கூடும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் தொல்லியல் ஆய்வில் கிடைத்த இரும்பு பொருட்களை காலக்கணக்கீட்டுக்கு உட்படுத்தியதில் அவை கிமு 2172 ஆண்டை சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. அதன் மூலம் தமிழர்கள் 4200 ஆண்டுகளுக்கு முன் இரும்பை பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது!
நாகரிகம் பெற்ற சமுதாயத்தால் தான் இரும்பை பயன்படுத்துவது குறித்து சிந்திக்க முடியும். 4200 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இரும்பை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே தமிழர் நாகரிகம் தோன்றியிருக்கக் கூடும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!
தமிழர் நாகரிகம் இன்னும் தொன்மையானதாக இருக்கலாம். அதை ஆய்வுகள் தான் உறுதி செய்யும். தொல்லியல் ஆய்வுகளை விரிவாக்கவும், ஏற்கனவே நடந்த ஆய்வுகளின் முடிவுகளை விரைந்து வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.