புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியிருப்பு, கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் போன்ற எந்த வகையிலும் வளராத மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள எல்.என்.புரம் ஊராட்சியில் உள்ள சுக்கிரன்குண்டு கிராமம். சுமார் 70 குடும்பங்கள் வசிக்கும், அந்த பகுதியில் ஆலங்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மு.நல்லக்கண்ணன் தலைமையில் வட்ட சட்டப்பணிகள் குழு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் ராஜா, நாணயவியல் கழகம் பசீர்அலி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
நீதிபதி மு.நல்லக்கண்ணன் பேசும் போது, "நானும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வளர்ந்து படித்து, இந்த பதவிக்கு வந்திருக்கிறேன். ஆனால் இந்த கிராமத்தில் படிப்பு என்பது கேள்விக் குறியாக தெரிகிறது. சுத்தம், சுகாதாரம் இல்லை. எனக்கு முன்னாள் பேசியவர்கள் சொன்னது போல மதுப்பழக்கம் அதிகமாக உள்ளதால் தான் இந்த கிராமம் வளர்ச்சியடையவில்லை என்று தெரிகிறது. குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு மது அருந்தக்கூடாது. நீங்களும் மது அருந்துவதை நிறுத்தினால் தான் முன்னேற முடியும்.
பள்ளிப் படிப்பு குழந்தைகள் அதிகம் இருந்தும், அவர்களை சரியாக பள்ளிக்கு அனுப்பாமல் தங்களுடன் வேலைக்கு அழைத்துச் சென்றுவிடுவதாக கூறினார்கள். படிக்க வேண்டிய குழந்தைகளை வேலைக்கு அழைத்துச் செல்வதும், வேலைக்கு அனுப்புவதும் மிகப்பெரிய குற்றம். அதேபோல இந்தப் பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடப்பது போல தெரிகிறது. 18 வயதிற்கு கீழே உள்ள பெண் குழந்தைகளை திருமணம் செய்வது குற்றச் செயல். அப்படி செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்கள் முன்னேற்றத்திற்கான தேவைகள் என்னவோ அதை மனுவாக எழுதிக் கொடுத்தால் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தீர்வு காணப்படும்" என்றார்.