நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கரூர் அதிமுக சார்பில் வீரராக்கியம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்று காலை 7 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 9 மணி வரை வேட்பாளர் பிரச்சாரத்துக்கு வரவில்லை. 9 மணிக்கு மேல் அதிமுக வேட்பாளர் தங்கவேல் இல்லாமல், மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மட்டும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து, எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், தாம்பூல தட்டுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பெண்களுக்கு, தலா 50 ரூபாயை அதிமுகவினர் வழங்கினர். நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் 50 ரூபாய் மட்டும் கொடுப்பதாக அதிமுகவினரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.