பெரியார் பல்கலைக்கழகத்தில், அடிப்படை விதிகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர்களை நியமித்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது புகார் எழுந்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் செயல்படும் சிண்டிகேட் குழுதான், ஆகப்பெரும் அதிகார அமைப்பு. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புதல், தொலைதூர படிப்பு மையங்களுக்கு ஒப்புதல் அளித்தல், புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்தல், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் என சிண்டிகேட் குழுதான் மிகப்பெரும் அதிகார மையம் ஆகும். இக்குழுவின் ஒப்புதல் பெற்றே துணை வேந்தர், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியும்.
இத்தகு அதிகாரம் வாய்ந்த சிண்டிகேட் குழுவில், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஜால்ரா போடும் ஆட்களை மட்டுமே உறுப்பினர்களாக நியமிப்பது, சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர்கள் வட்டாரத்தில் தொடர்ந்து கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெரியார் பல்கலை பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் சிண்டிகேட் குழுவில் மைக்ரோபயாலஜி துறை பேராசிரியர் பாலகுருநாதன், இதழியல் துறை பேராசிரியர் நடராஜன் ஆகிய இருவரும் புதிய உறுப்பினர்களாக நேற்று (மே 4, 2018) நியமிக்கப்பட்டுள்ளனர். சிண்டிகேட் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
பேராசிரியர் பாலகுருநாதன், அண்ணாமலை பல்கலையில் மரைன் பயாலஜி படித்துள்ளார். இந்தப் படிப்பும், இப்போது அவர் பேராசிரியர் பதவி வகிக்கும் மைக்ரோ பயாலஜி துறையும் வேறு வேறானது. மரைன் பயாலஜி படிப்பு, மைக்ரோ பயலாஜி படிப்புக்கு இணையானது அல்ல என்று அண்ணாமலை பல்கலைக்கழகமும் கூறியுள்ளது.
இது தொடர்பாக பேராசிரியர் அழகேச பூபதி என்பவர் பாலகுருநாதன் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவரை சிண்டிகேட் குழு உறுப்பினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளது விதிமீறலாகும்.
அதுமட்டுமின்றி பாலகுருநாதன், இணை பேராசிரியர் பணியிடத்தில் சேர்ந்த ஒரே ஆண்டிற்குள் பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகம் பரிந்துரை செய்துள்ளதாக ஒரு கடிதத்தைக் கொடுத்து, பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுவிட்டார்.
பாட வல்லுநர்கள் குழு மூலம் தேர்வு வைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில்தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பாலகுருநாதன் விவகாரத்தில் இந்த விதியும் மீறப்பட்டுள்ளது. மேலும், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் கழித்தே பதவி உயர்வு வழங்க முடியும். இந்த அடிப்படை விதியும் பாலகுருநாதன் விவகாரத்தில் மீறப்பட்டுள்ளது. இப்படி புகாருக்குள்ளான, சர்ச்சைக்குள்ளான ஒருவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்தது அப்பட்டமான விதிமீறல். அவரை திரும்பப் பெற வேண்டும்.
இதழியல் துறை பேராசிரியர் நடராஜனைக் காட்டிலும், பெரியார் பல்கலையில் பெருமாள், வெங்கடாஜலம், செல்வராஜ், அன்பரசன், வெங்கடாஜலபதி, தமிழ்மாறன் என பல்வேறு துறைகளில் மூத்த பேராசிரியர்கள் பலர் இருக்கும்போது ஜூனியரான நடராஜனுக்கு சிண்டிகேட் குழுவில் இடம் அளித்திருப்பதும் விதிகளுக்கு முரணானது. பல்கலையில் புரோக்கர்களாக செயல்படுவோருக்கும், ஜாதி அடிப்படையிலும்தான் சிண்டிகேட் உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு பெரியார் பல்கலை பேராசிரியர்கள் கூறினர்.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலை உருட்டப்பட்டு வரும் நிலையில், இப்போது பெரியார் பல்கலை சிண்டிகேட் குழு உறுப்பினர் நியமனத்தில் விதிகள் மீறி செயல்பட்டதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.