சேலத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தமிழக அரசு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றக்கோரி, சமையல் பாத்திரங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சமூகத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பாஜக அரசு, இரு மாதங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டம், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறி, அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அத்துடன் தேசிய குடியுரிமை பதிவேடு (என்சிஆர்), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகிய சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் மக்கள் போராடி வருகின்றனர். டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டம் வலுத்து வருகிறது.
சேலத்திலும் கோட்டை பகுதியில் கடந்த 23 நாள்களாக தொடர்ச்சியாக முஸ்லிம் பெண்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக சட்டமன்ற நடப்புக் கூட்டத்தொடரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை திடீரென்று முஸ்லிம்கள் அறிவித்தனர்.
அதன்படி, புதன்கிழமை (மார்ச் 11) காலையில் கோட்டை பகுதியில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு அரண்போல நின்று அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
முஸ்லிம் மக்களால் மேற்கொண்டு செல்ல முடியாமல் போனதால், அவர்கள் ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருக்கும் ரவுண்டா அருகில் சாலையில் அமர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஒரு பாடையில் கட்டி தூக்கி வந்தனர். சிலர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் குடியேறுவதற்கு வசதியாக வீட்டில் இருந்து சமையல் பாத்திரங்களையும் கொண்டு வந்திருந்தனர்.
இது தொடர்பாக போராட்டக்காரர்களிடம் கேட்டபோது, ''குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்,'' என்றார்கள்.
முஸ்லிம் மக்களின் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சம்பவத்தின்போது ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தது. அந்த வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் வழிவிட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும், போராட்டத்தில் அனுமதியின்றி ஈடுபட்டதாக சுமார் ஆயிரம் பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.