அமமுக பிரமுகர் இசக்கி சுப்பையா நெல்லை தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசுகையில்,
டிடிவி அளித்த பேட்டி உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கிறது. காரணம் என்னவென்றால் 2009 ல் நான் சொல்லித்தான் தளவாய் சுந்தரத்தை போட்டார்கள் என சொல்லியிருக்கிறார்கள். அவர் சொல்லித்தான் அவரை நிறுத்தினார்கள் என்றே இருக்கட்டும் ஆனால் சொல்லிக்காட்டுவது தலைமைக்கு அழகா?. 2009 ல் அவர் அதிமுகவில் இருந்தாரா?. 2011ல் நான் 48 நாட்கள் அமைச்சராக இருந்ததாக சொல்கிறார். ஒரு மண்டலம் நான் அமைச்சராக இருந்தேனாம். அதாவது என்னை கிண்டல் பண்றாராம்.
பரவாயில்லை பெரிய மனிதர் எங்களை கிண்டல் செய்யும் அளவுக்கு நாங்கள் சிறிய மனிதர்தான். கிண்டல் அடிக்கப்பட்டுத்தானே இங்கே வந்திருக்கிறோம் எனவே கிண்டல் அடிக்க நாங்கள் சரியான ஆட்கள்தான். அப்புறம் பாதாள சாக்கடை கான்ட்ராக்ட்டர் என்று சொல்கிறார். ஏன் அவருக்கு தெரியாத நான் பாதாளசாக்கடை காண்ட்ராக்ட்டர் என்று. என் பரம்பரையே கான்ட்ராக்ட்டர் தொழில்தான். அதேபோல் 70 கோடி அரசாங்கத்திடம் பாக்கி என சொல்கிறார். இருக்கலாம் ஆனால் ஒரு தலைமையிடம் அறையில் சொன்ன ரகசியத்தை வெளியிடுவது ஒரு தலைமைக்கு அழகா என நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும். என்னை அறிமுகப்படுத்தியது தான்தான் என்கிறார். அவர் 2009 ல் அதிமுகவில் இல்லை. அம்மாவின் பேச்சின் ஈர்ப்பில் அதிமுகவிற்கு வந்தோம். ஆனால் இன்று உள்ள டிடிவி தலைமை அழகாக பேசும் என கவர்ச்சிப்பட்டு வந்தோம். ஆனால் இப்போது ஏதோ தலைமையில் ஒரு பதற்றம் தெரிகிறது. ஏன் இப்படி பதறுகிறார் என்று தெரியவில்லை. நான் யாரையும் குற்றம் சொல்ல இங்கே வரவில்லை பதில் சொல்ல நினைத்தேன் அவ்வளவுதான்.
தற்போது இருக்கும் முதல்வரும், துணை முதல்வரும் எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நீங்கள் வரவேண்டாம் நாங்களே உங்களை தேடி வருகிறோம் என கூறும் அளவிற்கு பெருந்தன்மையுடன் இருக்கின்றனர். எனது தொண்டர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் என அனைவரும் தாய் கழகத்தில் இணைவதே நல்லது என ஆலோசனை தெரிவித்துள்ள நிலையில் வரும் ஜூலை 6 ஆம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் தாய் கழகமான அதிமுகவில் சுமார் 20 ஆயிரம் பேர் இணையப்போகிறோம் என்றார்.