" முன்பெல்லாம் எப்பொழுதாவது ஒரு முறை தான் ஓபன் மைக்கில் வந்து எங்களை அலறவிடுவாங்க.!! அதனால் சோர்ந்திருப்போம். ஆனால், இப்ப புதுசா வந்த எஸ்.பி.யோ இந்த நேரத்தில் தான் மைக்கில் வருவார் என கணிக்கமுடியாது.. எப்ப வேண்டுமானாலும் மைக்கில் வந்து எங்களை வேலை வாங்குகிறார்.! அதிலும் ஒரு சந்தோஷம்... வேலையை ஒழுங்கா முடிச்சோம்னா எங்களுக்கு அப்பப்ப ரிவார்டு கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார்." என எஸ்.பி.புராணம் பாடுகின்றார் சிவகங்கை மாவட்டப் போலீசார்.
தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு மேலாக சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.பி.யாக இருந்து இடமாற்றலான ஜெயச்சந்திரனுக்குப் பதில் புதிய எஸ்.பி.யாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவர் நேரடி ஐ.பி.எஸ்.அதிகாரியான ரோகித் நாதன். இந்த எஸ்.பி.யால் தான் மாவட்டத்தின் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையான மணல் கடத்தல், போலி மதுவிற்பனை மற்றும் லாட்டரி விற்பனை ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், " மாவட்டத்தில் மணல் திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு சார்ந்த எந்த பிரச்சனையும் உடனடியாக முடிவிற்கு கொண்டு வரப்படும். "இ" பீட் திட்டமும் கொண்டுவரப்படும்." என பொறுப்பேற்ற நாளில் மக்களின் எண்ணவோட்டத்திற்கு பதிலளித்தார் எஸ்.பி. பேச்சோடு இல்லாமல், " லாட்டரி, மணல் மற்றும் போலி மது இதனை பிடிப்பவர்களுக்கு உடனடியாக ரிவார்டு உண்டு." ஓபன் மைக்கில் அறிவிக்க அதிகளவு ரெஸ்பான்ஸ் மாவட்டப் போலீசாரிடமிருந்து.!
அடியில் மணலை நிரப்பி, அது தெரியாத வண்ணம் மரக்கட்டைகளைப் போட்டு மணல் திருட்டில் ஈடுப்பட்ட வாகனங்களை செட்டிநாட்டுப் போலீசார் கைப்பற்ற, காரைக்குடி வடக்குக் காவல் நிலையப் போலீசாரோ பிளாக்கில் விற்கப்படும் மதுப்பாட்டில்களைக் கைப்பற்றி எஸ்.பி.யின் பாராட்டு பரிசிற்காக காத்திருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, " குறிப்பிட்ட வழக்கினைக் கொடுத்து எவ்வளவு நேரத்தில் அந்த வழக்கிற்கு தவறில்லாமல் எப்.ஐ.ஆர்.போடப்படுகின்றது.? என்பதனையறிய காவல் நிலையங்களிடையேப் போட்டி வைக்க, காளையார்கோவில் காவல் நிலையம் முதலிடத்தினையும், காரைக்குடி வடக்கு காவல் நிலையம் இரண்டாமிடத்தையும், மானாமதுரை, திருப்புவனம் மற்றும் திருப்புத்தூர் காவல் நிலையங்கள் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாமிடங்களைப் பிடித்து எஸ்.பி.யின் பரிசிற்காக காத்திருக்கின்றனர். மூன்று வருடங்களாகவே சோர்ந்து அமைதியாயிருந்த காவல்துறையினரை உத்வேகப்படுத்தி வேலை வாங்கும் எஸ்.பி.ரோகித் நாதனிற்கு காவல்துறையினர் தரப்பு மட்டுமில்லாமல் பொதுமக்கள் தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளது. இந்த கடமையுணர்ச்சியை இறுதிவரை எஸ்.பி. பின்பற்ற வேண்டுமென்பது பொதுமக்களின் வேண்டுகோளும் கூட..!!