தமிழகத்தின் வாழ்வாதார போராட்டம் திசை மாறிவிடக்கூடாது என்று சென்னையில் IPL கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை எதிர்த்தால் அதை அரசியல் என்று சொல்வது கண்டனத்திற்குரியது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈ.ஸவரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழகமும் போராடி கொண்டிருக்கும் இந்த சூழலில் சென்னையில் IPL கிரிக்கெட் போட்டி நடத்த கூடாது என்று அனைத்துதரப்பினரும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்தால் தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு IPL போட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்றாமல் சென்னையில் தான் நடத்துவோம் என்றும், விளையாட்டிலிருந்து அரசியலை ஒதுக்கி வையுங்கள் என்றும் IPL தலைவர் ராஜீவ் சுக்லா கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்காக போராடும் போராட்டம் திசை மாறிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் மற்ற துறை சார்ந்தவர்களும் IPL போட்டியை சேப்பாக்கத்தில் நடத்த கூடாது என்று சொல்வதை அரசியல் நோக்கில் பார்ப்பது தவறு. ஒரு சிலரின் ஆதாயத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து பொழுதுபோக்கிற்காக நடக்கும் விளையாட்டு IPL கிரிக்கெட். இப்படி வெறும் கொண்டாட்டத்திற்காக நடத்தப்படும் விளையாட்டை உரிமைக்காக போராடும் போராட்ட களத்தில் நடத்த வேண்டாம் என்று கூறினால் அதை அரசியல் என்று போராட்டத்தை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.
சென்னையில் IPL போட்டியே நடத்தக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. தற்போதைக்கு வேண்டாம் என்றுதான் வலியுறுத்துகிறோம். தமிழர்களுக்கு IPL கிரிக்கெட் போட்டியை விட தண்ணீர் முக்கியம். காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக போராடி அதற்கான தீர்வை உச்சநீதிமன்றம் வழங்கியும் அதை நடைமுறைப்படுத்தாமல் மத்திய அரசு ஏமாற்றுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்று தமிழகம் போராடி வருகிறது.
தண்ணீர் இல்லாமல் இனி ஒரு விவசாயி தமிழகத்தில் இறக்க கூடாது என்ற போராட்டத்தின் உணர்வுகளை மற்றவர்கள் புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். IPL தலைவர் ராஜீவ் சுக்லா அவர்கள் கூறிய கருத்திற்கு உடனடியாக தமிழக மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும். எனவே தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறவிருக்கும் IPL கிரிக்கெட் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.