ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தை, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பெயரளவில் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதிலும் சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூத்த தலைவர்கள் பங்கேற்கவில்லை என ஆக.24-ந்தேதி வெளியான நக்கீரன் இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
இதையடுத்து, இன்று (26-09-2019) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் காங்.கமிட்டி தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (இன்றைய தினமும் பெரும்பாலான மூத்த தலைவர்கள் கலந்துக்கொள்ளவில்லை) ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மேடையில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது. வேலை இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்கள் தற்போது மூடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டிய மோடி அரசாங்கம், காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் வகையில் தான், சிதம்பரத்தை கைது செய்துள்ளது. பிரதமர் மோடி நீதித்துறை, ராணுவம், காவல்துறை போன்றவற்றை கையில் வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சட்டத்திற்கு மோடி பதில் சொல்லியாக வேண்டும்" என்றார்.
கடந்த வாரம் கராத்தே தியாகராஜன் தனியாக ப.சிதம்பரத்திற்காக போராட்டம் நடத்தினார். இப்போது, காங். தரப்பில் மற்றொரு போராட்டம் நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.