
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பான வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், போக்சோ வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விடிய விடிய சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சிவசங்கர் பாபாவை மூன்று நாட்கள் காவலில் எடுத்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார், அவரை சுஷில் ஹரி பள்ளிக்கு கூட்டிச் சென்று விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.