Skip to main content

தேர்தல் அன்பளிப்பை கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்தவருக்கு மிரட்டல்...!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

சமீப காலங்களாக தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணம், பிரியாணி, மது என அள்ளி வீசுகிறார்கள் வேட்பாளர்கள். இது எம்பி எம்எல்ஏ இடை தேர்தல்களில் ஆரம்பித்து உள்ளாட்சித் தேர்தல்களில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பதவியை பிடிக்க ஒவ்வொரு வேட்பாளரும் வீட்டுக்கு வீடு குத்துவிளக்கு, அகல்விளக்கு, சோப்பு, சில்வர் தட்டு, மூக்குத்தி, சேலை என விதவிதமான பரிசுப் பொருட்களை தாராளமாக வாரி வழங்கி வருகிறார்கள்.

 

Intimidation of person donated gifts to the temple

 



இதில் ஆண் வாக்காளர்களுக்கு மது பிரியாணி என தினசரி கவனிப்புகள் தனி வகை. இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு வாக்காளருக்கும் 200 முதல் 500, 1000, 2000 என் ஓட்டுக்கு பணத்தையும் தாராளமாக வீசி வருகிறார்கள். மக்கள் மனநிலையும் அதற்கு ஏற்றவாறு மாறிவருகிறது. சில வேட்பாளர்கள் இவர் நமக்கு ஓட்டு போட மாட்டார் என்று பரிசு பணத்தை கொடுக்காமல் ஒதுங்கிப்போனால் கூட அதைக் கேட்டு வாங்கும் வாக்காளர்களும் நிறைய உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு வாக்காளர் தனக்கு வேட்பாளர்கள் கொடுத்த பரிசுப் பொருள்களை கோவிலுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழ்கா வட்டங் குறிச்சியை சேர்ந்த பிச்சமுத்து என்ற வாக்காளர் ஒரு எடுத்துக்காட்டாக இதை செய்துள்ளார். இந்த ஊராட்சியில் கீழ்கா வட்டங் குறிச்சி, மேல் காவட்டங் குறிச்சி, தட்டாஞ்சாவடி சேனாபதி குந்தரபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சி. இங்கு பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் சிலர் ஒவ்வொரு வீட்டுக்கும் குத்துவிளக்கு, சீப்பு, சில்வர் தட்டு என விதவிதமான பரிசுப் பொருட்களை வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று  கொடுத்து வருகிறார்கள்.

 

Intimidation of person donated gifts to the temple

 



அப்படிப்பட்ட பரிசுப் பொருட்களை தான் பிச்சமுத்து என்ற வாக்காளர் தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி முன்பு வைத்து பெரிய கும்பிடு போட்டுவிட்டு, இந்த பொருட்கள் எனக்கு வேண்டாம் இது தெய்வத்திற்கு காணிக்கை என கூறி கோவிலில் வைத்து விட்டு திரும்பி விட்டார். அவர் கூறும்போது, "ஒவ்வொரு வேட்பாளரும் அன்பளிப்பை கொண்டுவந்து வலிய திணிக்கிறார்கள். வேண்டாம் என்றாலும் விட மறுக்கிறார்கள். நாம் பரிசுப்பொருட் கள் வேண்டாம் என்று கூறினாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை வாங்கிய பிறகு நாம் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை உருவாகிவிடுகிறது. 

இது மன உளைச்சலை ஏற்படுத்தியது. பரிசுப் பொருட்களை திருப்பிக் கொடுத்தாலும் வேட்பாளர்கள் கோபப்படுவார்கள். எனவேதான் எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அந்த பரிசுப் பொருட்களை காணிக்கையாக அளித்து விட்டேன். இந்த பரிசுப் பொருட்கள் வாங்கிய பிறகு எனக்கு இரவில் தூக்கமே வரவில்லை. மன உளைச்சலையும் உறுத்தலை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம், இதுபோன்ற அன்பளிப்புகள் பணம் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் கொடுப்பதை தடுக்கவேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் சுதந்திரமாக தங்கள் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் கிராமப்புறங்களில் உண்மையான வலிமையான உள்ளாட்சி அமைப்பு ஏற்படும். அப்போதுதான் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பாடுபடுவார்கள். இதை அரசு உறுதி செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.

பிச்சமுத்து பரிசுப்பொருட்களை கோவிலுக்கு காணிக்கை ஆக்கியது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பிச்ச முத்துவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மிரண்டு போன பிச்சமுத்து தேர்தல் வரை ஊரைவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள். உள்ளாட்சி தேர்தல் மூலம் மக்களுக்கு அருகிலிருந்து எளிமையான முறையில் அரசு திட்டங்களை சேவைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பிரதிநிதிகளை உருவாக்கத்தான் உள்ளாட்சித் தேர்தல். ஆனால் பெரும்பாலான வேட்பாளர்கள் வெற்றி பெற்று செலவு செய்யும் பணத்தை விட பலமடங்கு தவறான வழியில் பணம் சம்பாதிக்கவே ஓட்டுக்கு பணம் பரிசு என கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். இந்தப் போக்கு மாறினால்தான் உண்மையான உள்ளாட்சி ஜனநாயகம் தழைக்கும் என்கிறார்கள் நேர்மையாளர்கள். 

சார்ந்த செய்திகள்