Skip to main content

மார்ச் 8: மகளிருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

international womens day wishes from tn cm mk stalin 

 

உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், " ‘அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ என்று பாலின சமத்துவத்துக்காக முழங்கிய பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் எனது உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலமைச்சராக நான் இட்ட முதல் கையொப்பமே பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் இலவசப் பேருந்து திட்டத்துக்காகத்தான். முதல் நிதிநிலை அறிக்கையிலேயே உலகின் முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத வகையில், மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தினோம். அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 விழுக்காட்டுக்கு உயர்த்தி எல்லா அலுவலகங்களிலும் ஆண்களுக்குச் சமமாகவும், ஆண்களை மிஞ்சியும் மகளிர் பணிபுரியும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். தொடர்ந்து மூவலூர் மூதாட்டி இராமாமிருதம் அம்மையாரின் பெயரால் பெண்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் புதுமைப் பெண் திட்டத்தையும் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீடுகள் குடும்பத்தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் என்ற ஆழ்ந்த அக்கறைமிகு அறிவிப்பினையும் கடந்த ஆண்டு மகளிர் நாள் அன்று அறிவித்தேன். மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களையும், நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 50 விழுக்காடு வேலைவாய்ப்பு அளிப்பதை நடைமுறைப்படுத்தியுள்ளோம், புதிய சிப்காட் தொழிற்பேட்டைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

 

சென்னை, கோவை, மதுரை ஆகிய பெரிய மாநகராட்சிகள் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளை (50 விழுக்காட்டுக்கும் மேலாக) பெண்களுக்கு ஒதுக்கி, அவர்கள் இன்று வணக்கத்துக்குரிய மேயர்களாகச் செயலாற்றும் நிலையை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒதுக்கப்பட்ட 50 விழுக்காட்டுக்கும் மேல் பெண்கள் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும், கவுன்சிலர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர் என்பது இதுவரை இல்லாத சாதனை ஆகும்.

 

மகளிருக்கு எதிரான வன்முறைகள் - குற்றங்களை ஒழிப்பது, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சம உரிமையை நிலைநாட்டுவது ஆகிய உயர் இலட்சியங்களை அடைவதற்கு, தமிழ்நாடு அரசின் மகளிருக்கான புதிய கொள்கையும் விரைவில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. அதன் வழியாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத்தலைவர்களாக உள்ள பெண்களுக்குக் கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது, முக்கியப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது எனப் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல சீரிய திட்டங்களை நமது அரசு செயல்படுத்த எண்ணியுள்ளது என்பதையும் இந்த மகளிர் நாள் செய்தியில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்.

 

பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சித் திட்டங்களால் செய்து காட்டுவதுதான் திராவிட மாடல் என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம். தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் பெண்ணினக் காவலர் கலைஞர் அவர்களும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம். 'பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு. மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே' என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம். பெண்ணுரிமை காப்போம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்