ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் ஸ்ரீபெரியகாண்டியம்மன் அண்ணமார் திருக்கோவில் அமைந்துள்ளது. 1200 கும்பங்களின் குல தெய்வமாக இக்கோவில் விளங்கி வரும் நிலையில், வேறு சாதி திருமணம், கலப்பு திருமணம் போன்றவற்றைச் செய்ததாகக் கூறி, 70 குடும்பத்தினரைக் கோவிலுக்குள் வர கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கடந்த மாதம் 1-ம் தேதி விசாரணை மேற்கொண்ட மொடக்குறிச்சி வட்டாட்சியர் இளஞ்செழியன், பாதிக்கப்பட்ட 70 குடும்பத்தினரையும் கோவிலுக்குள் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து வட்டாட்சியரின் உத்தரவைச் செயல்படுத்தாமல் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில், கலப்பு திருமணம் செய்த குடும்பங்களைச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி தீண்டாமையைக் கடைப்பிடித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களைக் கோவில் வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.