கலப்புத் திருமணம் செய்யும் தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்க தனிப்பிரிவு துவக்கம்!
சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் சஞ்சய்குமார் விடுத்துள்ள அறிக்கையில், “சேலம் மாநகர எல்லையில் வசிக்கும், கலப்பு திருமணம் செய்த தம்பதியினர், தங்களுக்கு வரும் அச்சுறுத்துதல் மற்றும் அவர்களுக்கு தீங்கு விளைவித்தல், கவுரவ கொலை செய்தல் ஆகியவற்றை தடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இது, சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில், சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலர் சரவணகுமார் ஆகியோர் மூலம் இணைந்து செயல்படும். இப்பிரிவுக்கான புகார்களை சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு துணை ஆணையரால் பெறப்படும். பாதிக்கப்பட்டவர் தங்கள் புகார்களை 90872 00100 என்ற மொபைல் எண்ணிலும், போலீசின் சி.சி.டி.என்.எஸ் வலைதளத்திலும் தெரிவிக்கலாம்.
கலப்பு மனம் புரிந்தவர்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் தெரிவிக்கும் நிலையில் அவர்களுக்கு அவர்களின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களை உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்குவதோடு, அந்த தம்பதியினரை அவருடைய பெற்றோர் அல்லது மிரட்டுபவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கும் போதிய மனநலம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.