Skip to main content

கலப்புத் திருமணமா..? ஆகவே ஆகாது..! ஊரைவிட்டு விரட்டப்பட்ட 15 காதல் குடும்பங்கள்.!!!

Published on 26/02/2018 | Edited on 26/02/2018
punna kayal


"வெவ்வேறு சாதியை சேர்ந்த நாங்கள் சாதி மாறி திருமணம் செய்துக்கொண்டதை பெற்றோர் ஒப்புக்கொண்டாலும், ஊரார் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தற்பொழுது எங்களைப் போன்று காதல் திருமணம் செய்த 15 குடும்பங்களை தண்டோராப் போட்டு ஊரைவிட்டு விட்டு விரட்டியுள்ளனர் கிராமத்துப் பஞ்சாயத்தார்." என கண்ணீர்மல்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்து அருகிலுள்ள ஊரில் தஞ்சமடைந்துள்ளனர் லுபர்ஸா மணிகண்டன் தம்பதியினர் உள்ளிட்டோர்.

என்ன தான் விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் மூலம் நாள்பட்ட நோய்க்கு மருந்தைக் கண்டுப்பிடித்தாலும், மண்ணோடு மனிதனின் மனதிலும் வேரூன்றியுள்ள சாதியினை அழிக்கும் மருந்து இன்னும் கிடைக்கவில்லை. இன்றும் சாதீயின் கோர நாக்குகள் தீண்டப்படாத கிராமங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரிய அலங்கார வளைவுடனும், ராஜாகன்னி ஆலயத்துடனும் நம்மை வரவேற்கின்றது சாதீ பஞ்சாயத்து நடத்திய தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கிராமம். ஊரிலுள்ள பெரும்பாலோனரின் தொழில் மீன்பிடித்தலே.
 

manikandan


"எனக்கு சொந்த ஊர் புன்னைக்காயல் கிராமம். வேலைக்காக பக்கத்து ஊரான ஆத்தூருக்குப் போய்விட்டு வரும்பொழுது தான் சேர்ந்தபூமங்கலம் மணிகண்டனைப் பார்த்தேன். காதலித்தேன். அவரும் நானும் வேற வேற சாதி என்றாலும் காதலுக்கு அது தடையில்லையே.! காதல் வளர்ந்து இப்ப இரண்டு குழந்தைக்குத் தாயாக இருக்கின்றேன். அவரும் இப்ப ராணி மாதிரி என்னைத் தாங்குறாரு. ஆரம்பத்துல வேண்டா வெறுப்பாக இருந்த என் பெத்தவங்க.., நாளடைவில் எங்களை ஏத்துக்கிட்டு ஒத்துப்போய்ட்டாங்க.! இருந்தாலும் ஊர்க்காரங்க கண்ணிலிருந்து நாங்க தப்பலை. ஏச்சுப் பேச்சு கேலிக் கிண்டலோட ஒவ்வொரு நாளும் கடக்கும். இதனால் நான் அவரோட ஊரிலேயே இருந்து வந்தேன். கடந்த டிசம்பர் மாதம் திருவிழாவிற்கு புன்னைக்காயலுக்கு வந்தப் பொழுது, நேருக்கு நேராகவே ஊர்க்காரங்க வந்து, " நீ சாதி மாறி ஒருத்தனைக் கூட்டிட்டு ஓடி ஆரம்பிச்சு வைச்சுட்ட. இப்ப ஊரில் இருக்கின்ற பெண்கள் எல்லாம் அப்படியே நடந்துக்கிறாளுக. இதற்கான தண்டனையை நீ அனுபவிச்சே ஆகனும்." என ஊர்க்காரங்க கோபப்பட்டு கத்த சாதாரணமாக விட்டுட்டேன். கடந்த வாரத்தில் ஊரிலுள்ள ஜான்ஸி ஆத்தூரை சேர்ந்த ரமேஷை சாதி மாறி கல்யாணம் செய்ய, உடனடியாக ஊர்க்கமிட்டிக் கூட்டி 20ம் தேதி அந்த ஊரில் சாதி மாறி திருமணம் செய்த 15 குடும்பத்தையும் ஊரைவிட்டு விரட்டிவிட்டுட்டாங்க." என்றார் புகார் கொடுத்த லுபர்ஸா மணிகண்டன்.

12 ஆயிரம் மக்கள் தொகைக் கொண்ட இந்த கிராமத்தில் வருடந்தோறும் 24 நபர்கள் கொண்ட கிராமக்கமிட்டியைத் தேர்ந்தெடுப்பது ஊரார் வழக்கம். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமக்கமிட்டிக்கு ஊர் கட்டுப்படவேண்டும் என்பது பொதுவான விதி. கடந்த 20ம் தேதி நடந்த கிராமக்கமிட்டியில், " சாதியே தெரியாத வெளியூர்க்காரன் இங்க வந்து பெண்ணைக் காதல் செய்து திருமணம் செய்துக்கிட்டுப் போயிடுறாங்க. இதனால் நமது அடிப்படையே கேள்விக்குறியாகிறது. இதை இப்படியே விட்டுட்டால் அப்புறம் எல்லோரும் ஒன்னுமண்ணாப் பழகிடுவாங்க. அதனால் ஊரில் சாதி மாறி கலப்புத் திருமணம் செய்த அனைவரையும் விரட்டிவிட்டுடனும். மீறி இருந்தால் அப்புறப்படுத்திய வேண்டியது இளவட்டங்கள் பொறுப்பு." என முடிவு செய்ய, அதனடிப்படையில் 15 குடும்பங்களின் பெயர்களைத் தண்டோராப் போட்டு ஊரை விட்டு விரட்டி வைத்தது கிராமக் கமிட்டி.

ஊராரால் ஒதுக்கிவைக்கப்பட்ட பெயர், புகைப்படம் தரவியலாத மற்றொரு தம்பதியோ, " ஊரில் இருந்தால் வீடுகளோட சேர்த்து எங்களையும் எப்படியும் அடித்து நொறுக்கிடுவாங்க.. வாழனும் தான் கல்யாணம் செய்துக்கிட்டோம். போலீஸார் தலையிட்டு எங்களை வாழவைக்கனும்." என்றார்கள்.

சார்ந்த செய்திகள்