நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் விசாரணையானது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனிப்படையின் ஒரு குழுவைச் சேர்ந்த 3 போலீசார் சம்பவம் நிகழ்ந்த கொடநாடு எஸ்டேட் பகுதியில் 8,9,10 ஆகிய எண் கொண்ட நுழைவு வாயில்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தனிப்படை குழுவினருடன் எஸ்டேட் மேலாளர் நடராஜனும் உள்ளார். நேற்று கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான மேல் விசாரணைக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒருமாத கால அவகாசம் வழங்கிய நிலையில் போலீசார் இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரமாகக் கையிலெடுத்துள்ளனர்.
இதற்காக நேற்றைய தினமே உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி சுதாகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கனகராஜின் உறவினர்களிடம் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். மற்றொரு குழுவினர் சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவில் நேரில் சென்று சோதனையிட்டு விசாரித்து வருகின்றனர். இப்படி பலகோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.