தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 30ம் தேதியும் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக மற்ற 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம் நகராட்சித் தலைவர் பதவிக்கான சாதிவாரியான இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 152 நகராட்சிகள் உள்ளன. இவற்றில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சித் தலைவர் பதவி மட்டும் பழங்குடியின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 9 நகராட்சித் தலைவர் பதவியிடங்கள் பட்டியலின (எஸ்.சி.) பெண்களுக்கும், 8 நகராட்சித் தலைவர் பதவியிடங்கள் பட்டியலின பொதுப்பிரிவுக்கும், 51 நகராட்சித் தலைவர் பதவியிடங்கள் பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவை தவிர மற்ற நகராட்சிகளில் தலைவர் பதவியிடங்களில் எந்த பிரிவையும் சார்ந்த ஆண், பெண்கள் போட்டியிடலாம்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைப் பொருத்தவரை மொத்தம் 11 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய 2 நகராட்சி தலைவர் பதவியிடங்கள் பட்டியலின பொதுபிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர், ராசிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 நகராட்சித் தலைவர் பதவியிடங்கள் பொதுப்பிரிவில் பெண்களுக்கும், இடைப்பாடி, நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய 5 நகராட்சிகளில் தலைவர் பதவியிடங்கள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்து மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.