கடலூர் தெற்குத்திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைத்து அவமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் புவனகிரி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மட்டுமல்ல இதற்கு முன்பே பட்டியலின ஊராட்சிமன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவது, சுதந்திர தின விழாவில் கொடியேற்ற விடமால் தடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. ஏன் இதைவிட உச்சமாக ஊராட்சி மன்றத் தலைவரை சவக்குழி தோண்ட சொன்னது வரை, ஊராட்சி மன்றத் தலைவர்களை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பட்டியலினத்தவர்களை அவமதிப்பது காலப்போக்கில் மாறிவிடும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இது காலப்போக்கில் மாறி விடும். இன்றைக்கு அவர்கள்தான் முன்னேறியவர்களாக இருக்கிறார்கள். அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தான் எல்லா வகையிலும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இசையிலும் சரி, பாடல்களிலும் சரி, அறிவுப்பூர்வமாகவும் சரி, உயரதிகாரிகள் என எல்லாவற்றிலும் அவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்றார்.