Skip to main content

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இளைஞன்; தகாத வார்த்தையில் பேசிய ஆய்வாளர் - கண்ணீர் வடிக்கும் இளம்பெண்

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
inspector spoke inappropriately to the woman who complained!

திருச்சி மாநகர் சத்திரம் பேருந்து நிலையம் பட்டவர்  சாலையில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், பவித்ரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் தங்கி அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார்.  இந்த நிலையில் கடந்த 2023 ஆம்  ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவரும், திருச்சி பால் பண்ணை விசுவாஸ் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ பொன்னையன் என்பவருடன் பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. பின்னர் செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டு பின்னர் தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் அடிக்கடி சந்தித்தும் உள்ளார். மேலும் கிருஷ்ணா ஆயில் மில் உரிமையாளரும், முன்னாள் அதிமுக கவுன்சிலருமான ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த மாமா என்றும்,  முன்னாள் எம்.பியும் தற்போது அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கும் பா.குமாரிடம் வேலை செய்து கொண்டு இருக்கிறேன் என்றும், அதனால் தனக்குச் செல்வாக்கு அதிகம் என்றும் பவித்ராவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்பு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதனால் பவித்ரா கர்ப்பமாகியுள்ளார்.

இந்த விஷயம் ஸ்ரீபொன்னையனுக்கு தெரியவர, தற்போது குழந்தை எல்லாம் வேண்டாம் வீட்டிற்கு தெரிந்தால் திருமணம் செய்துவைக்க மாட்டார்கள் என்று பவித்ராவிடம் கூறி கருக்கலைப்பு மாத்திரையும் வாங்கி கொடுத்துள்ளார். அவர் கூறியதை நம்பி, பவித்ராவும் மாத்திரையை சாப்பிட்டு கர்ப்பத்தைக் கலைத்துள்ளார். அதன்பிறகு பவித்ராவுடன் பேசுவதை ஸ்ரீ பொன்னையன் தவிர்த்து வந்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த  பவித்ரா தொலைப்பேசி எண்ணில் ஸ்ரீ பொன்னையனை பலமுறை தொடர்பு கொண்டு கேட்டபோது, திருமணத்திற்கு சம்மதிக்காமல் அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த பவித்ரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்பு மருத்துவமனை சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பவித்ரா விஷம் அருந்திய பிறகு பொன்னையன் முற்றிலுமாக தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனை அடுத்து, தான் ஏமாந்ததை அறிந்த பவித்ரா கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தபால் மூலம் கோட்டை காவல் நிலையத்திற்குத் திருச்சி மாநகர காவல்துறைக்கும் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மறுநாள் 16ஆம் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது மூன்று நாட்களாக காவல் நிலையத்திற்கு காவலர்கள் வரச் சொல்லி உள்ளார்கள். ஆனால் எதிர் தரப்பில் ஸ்ரீ பொன்னையனுக்கு அவருடைய வழக்கறிஞர்கள் இருவர்  போலீஸிடம் சென்று பேசி முடித்து விடுங்கள் என என்று சமாதானம் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் கோட்டை போலீசார் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லவும் அறிவுறுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பின்பு மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கே.கே நகர் காவலர் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மாநகர காவல் ஆணையர் காமினியிடம் பவித்ரா புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டதன் அடிப்படையில்,  ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதியிடம் பவித்ரா புகார் கொடுத்துள்ளார். அப்போது ஸ்ரீ பொன்னையனுக்கு ஆதரவாக பேசிய காவல் ஆய்வாளர் சரஸ்வதி பவித்ராவை தகாத வார்த்தையில் திட்டியிருக்கிறார். பின்பு காவல் ஆணையர் அறிவுறுத்தலால் ஸ்ரீ பொன்னையன் மீது வழக்குப் பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் ஸ்ரீ பொன்னையன் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வழக்குப்பதியப்பட்டு இரண்டு நாட்களாகியும், முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும் ஸ்ரீ பொன்னையன் கைது செய்யப்படவில்லை என்று காவல் ஆணையரிடம் பவித்ரா புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால் அப்போது பணி நிமித்தமாக காவல் ஆணையர் வெளியே சென்றதால், உளவுப் பிரிவு உதவி ஆணையரிடம் புகார் மனுவைக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

பவித்ரா 18 நாட்களாகியும் எனக்கு நீதி கிடைக்கவில்லை; ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு நீதி கேட்டுச் சென்றால் தன் குடும்பத்தை மிரட்டுவது இல்லாமல் தன்னையும் தகாத வார்த்தையில் பேசுகின்றனர் என்று கண்ணீர் வடிக்கிறார். 

சார்ந்த செய்திகள்