காவல் ஆய்வாளரைத் தாக்கிய பேரிடர் மீட்புப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிக்காக பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த காவல்துறையினர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, சென்னை பூவிருந்தவல்லி 13 ஆவது பட்டாலியன் 'ஏ' கம்பெனியில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ஜீவா எட்வர்ட் ராஜ் (58) என்பவர் தலைமையில், 50 காவலர்கள் கடந்த மார்ச் மாதம் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பேரிடர் மீட்புப்படையினரில் ஒரு பிரிவினர் சேலம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1 ஆம் தேதி, அங்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், காவலர் தென்றல் குமார் (28) என்பவர் மட்டும் பணிக்குச் செல்லாமல் மண்டபத்திலேயே இருந்தார்.
இதையறிந்த காவல் ஆய்வாளர் ஜீவா எட்வர்டு ராஜ், உடனடியாக தென்றல் குமாரை ஆஜர்படுத்துமாறு மற்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தென்றல்குமார் அவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். திடீரென்று அவர் ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்தார். மற்ற காவலர்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவலர் அறைந்ததில், ஆய்வாளரின் கண் அருகே லேசான காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக, சேலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜீவா எட்வர்டு ராஜ், அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், சம்பவத்தின்போது தென்றல்குமார் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் குடிபோதையில் இருந்ததாகச் சான்றிதழ் பெறப்பட்டதை அடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.