திருவண்ணாமலை மாவட்டத்துக்கு புதியதாக வந்துள்ள எஸ்.பி சிபிசக்கரவர்த்தி, மாவட்டத்தில் சாராய விற்பனையே இருக்ககூடாது என போலிஸாரை எச்சரித்துள்ளார். அதன்அடிப்படையில் மாவட்டத்தில் சாராய ரெய்டுகள் நடந்துவருகின்றன. பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செய்யார் தாலுக்காவுக்கு உட்பட்டது காழியூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் படவேட்டான். இந்நிலையில், காழியூர் படவேட்டான் வீட்டில் தற்போது அளவுக்கு அதிகமாக சாராயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலிஸார் படவேட்டான் வீட்டில் ரெய்டில் ஈடுப்பட்டனர். மாடி வீட்டில் 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 21 கேன்கள், பாக்கெட் சாராயம் 280 லிட்டர் கைப்பற்றினர்.
இதுப்பற்றி படவேட்டானிடம் விசாரித்த போலிஸ் அதிகாரிகளிடம், எனக்கு எதுவும் தெரியாது. 4 பேர் லாரியில் வந்து அதிலிருந்து மூட்டைகளையும், கேன்களையும் இறக்கி கொண்டும்போய் மாடியில் வைத்தார்கள். அதுமட்டும்மே எனக்கு தெரியும். மற்றதெல்லாம் என் மனைவி கண்ணமாளுக்கு தான் தெரியும் என்றுள்ளார்.
கண்ணமாள் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்கு சமையல் பணிக்கு சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார். போலிஸாரின் ஒரு தனிப்படை உடனே காஞ்சிபுரம் சென்று கண்ணமாளை தங்களது கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஸ்பிரீட் கடத்திவந்து அதில் தண்ணீரை அதிகளவில் கலந்து சாராயம் என பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது செய்யார்ஈ வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வழக்கம். அதற்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த ஸ்பிரீட். அந்த வீட்டில் அடிக்கடி கொண்டு வந்து வைப்பது வழக்கம் என்கிறது போலிஸ்.