வடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக காலை 10 மணி அளவில் வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து அறிவியல் கலை நிகழ்வுடன் கூடிய மாணவர்களின் ‘போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி’ மாவட்ட துணைத் தலைவர் தனகேசவமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், தலைவர் பால குருநாதன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயற்குழு உறுப்பினர் வி. வேல்முருகன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற வேலைகளை மாவட்டச் செயலாளர் ஆர். தாமோதரன் அறிக்கையுடன் விளக்கிப் பேசினார். பொருளாளர் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். மாநிலச் செயலாளர் எஸ். ஸ்டீபன் நாதன் மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்தினார்.
எயிட் இந்தியா செயலாளர் அறிவழகன், மாற்று ஊடக மைய செயலாளர் குணாளன், ஆலோசகர் பாலமுருகன், கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள். கலைச்செல்வி மற்றும் ஜெயவேல் இணைந்து அறிவியல் பாடல் பாடினார்கள்.
இம்மாநாட்டில் மாவட்டத் தலைவராக ஆர். கார்த்திகேயன், செயலாளராக சே. பரமேஸ்வரி, பொருளாளராக த. ஜெயபிரகதி, துணைத் தலைவர்களாக பி. தனலட்சுமி, எஸ். செல்வமணி, ஜி. கேத்தரின், வி. பூர்வசந்திரன், ஆர். தாமோதரன், துணைச் செயலாளர்களாக தனகேசவமூர்த்தி, அருள்தீபன், எம். உதயேந்திரன், பிரியா, முருகானந்தம் ஆகியோருடன் 9 ஒருங்கிணைப்பாளர்கள் 25 செயற்குழு உறுப்பினர்கள் புதியதாகத் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாக மற்றும் செயற்குழுவை பாராட்டி மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணி சிறப்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் தனலட்சுமி நன்றி உரை நிகழ்த்தினார்.
சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ள போதை கலாச்சாரத்தை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தொடர்ந்து கவனம் செலுத்தி பள்ளிகளில் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திட வேண்டும். பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில், என்.எல்.சி நிறுவனம் அறிவித்த ‘அறிவியல் ஆராய்ச்சி மையத்தை’ நிறுவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் ஆரோக்கிய வாழ்வு தொடர்ந்து கீழ் நிலையில் உள்ளது. அவற்றை உறுதியுடன் வளர்த்திட மாவட்ட மற்றும் மாநில நிர்வாகம் மேலும் பல வகையில் சேவை மற்றும் பிரச்சாரம் செய்திட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.