கண்வலிக் கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தி வெளியிட்டு இருந்தார்.
இது குறித்து அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது; “தமிழ்நாட்டில் கண்வலிக் கிழங்கு சுமார் 5100 ஹெக்டரில் திண்டுக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 3985 டன் கண்வலிக் கிழங்கு விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கண்வலிக் கிழங்கில் மருத்துவ குணம் கொண்ட வேதிப் பொருள் அதிகமாக உள்ளதால் புற்றுநோய், வாதம், வீக்கம் போன்ற நோய்க்கான மருந்து தயாரிப்பிலும் பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷக் கடிகளுக்கு மருந்து தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுவதாக அறிவியல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த விதையில் இருந்து கிடைக்கக்கூடிய வேதிப்பொருள் மருந்து தயாரிப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கல்வலிக் கிழங்கு வகைகள் வட மாநிலங்களில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இத்தகைய தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் கண்வலிக் கிழங்குக்கு உரிய விலையை விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்குவதில்லை. கண்வலிக் கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்வலிக் கிழங்கு விவசாயிகளுக்கு சந்தை நிலவரப்படி உரிய விலையை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விதமான விளைபொருட்களுக்கும் லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த ஓராண்டாக எடுத்து வருகிறார். அது போல் கண்வலிக் கிழங்கு விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது. அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு ஒன்றிய அரசின் வேளாண்மை செலவு மற்றும் விலை ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு தமிழக அரசு கடந்த 12.7.22 ம் தேதி கடிதம் மூலம் கோரியுள்ளது.
கடந்த 14.7.22 ம் தேதியன்று பெங்களூரில் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட அனைத்து மாநில வேளாண்மை துறை அமைச்சர்களுக்கான கருத்தரங்கில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரிடம் கண்வலிக் கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து அதற்கான கோரிக்கையை வலியுறுத்தி நேரில் கடிதம் கொடுத்துள்ளார்.
உளுந்து, துவரை போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது போல் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கண்வலிக்கிழங்குக்கு ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை விரைவில் நிர்ணயம் செய்யும் பட்சத்தில் கண்வலிக்கிழங்கு விதைகளை கொள்முதல் செய்யும் விவசாயிகளையும், தமிழக விவசாயிகளையும் ஒருங்கிணைத்து அரசின் மேற்பார்வையில் தமிழகத்தில் கண்வலிக் கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்” என்று கூறினார்.