கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ வைகுண்டம் வட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. ரயில் பயணிகள் 800 பேர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே சிக்கிக்கொண்ட நிலையில், அவர்கள் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு மீட்கப்பட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ஏரல் பகுதிகளில் சேதமடைந்த வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்த நிலையில், அரசினுடைய நிவாரணத்தை எதிர்பார்த்து பல குடும்பங்கள் காத்திருக்கும் சூழலில், பகுதி சேதம் அடைந்த மற்றும் முழுமையாக இடிந்து விழுந்த வீடுகள் உள்ளிட்ட கணக்கெடுப்பு பணிகள் தற்போது துவங்கியுள்ளது, அந்தப் பகுதி மக்களுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது.