காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று தந்த மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பதவி நீக்கம் செய்வதுடன், அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, திருச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இணைந்து இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளை தாண்டி தபால் நிலையத்துக்கு உள்ளே செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் பாஜக எம்.பியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விவசாயிகளைப் பாதுகாக்க விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டுமெனவும் பெண்களைப் பாதுகாக்க குற்றவாளிகளுக்கு துணைபோகாமல் தண்டிக்க வேண்டுமெனவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர்.