
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், "அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ் இன்றி அரசுப் பள்ளியில் சேர வரும் தனியார் பள்ளி மாணவர்கள், வெளியூரில் படித்த மாணவர்கள் உள்ளிட்ட 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இயன்ற ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு சான்றிதழின்றி சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சத்தியகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் குமரவேல், மாவட்ட துணை செயலாளர் லெனின், துணைத்தலைவர் ஆகாஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுகன்யா, ராகுல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரைச் சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.