சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இருவேளை பாடப்பிரிவுகளாக சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் 3500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பிச்சாவரம் செல்லும் பேருந்தில் ஏறி மண்டபம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் கல்லூரிக்கு நடந்து செல்ல வேண்டும். அதேபோல் கடலூர் மார்க்கத்திலிருந்து வரும் மாணவர்கள் தீத்தாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 2.5 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.
கல்லூரி நேரத்தின் போது சரியான பேருந்து இல்லாததால் மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் கல்லூரி நேரத்தின் போதும், கல்லூரி நேரம் முடிந்தும் சாலையின் இரு புறங்களிலும் நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. இது புறவழிச்சாலை என்பதால் அடிக்கடி விபத்தில் சிக்கி மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். கல்லூரி நேரத்திற்கு அரசு பேருந்து இல்லாததால் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் மாணவர் மத்தியில் புகார் கூறப்படுகிறது.
மாணவர்கள் பல ஆண்டுகளாக கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் தலைமையில் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு சரியான நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை என மாணவர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லெனின் கூறுகையில், ''கல்லூரி நேரத்திற்கும், கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என பல போராட்டங்களை நடத்தியுள்ளதாகவும். கடந்த 2 நாட்களுக்கு முன்பும் கல்லூரி நேரத்தின்போது பேருந்து இயக்க வேண்டும் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் விளைவாக அன்று ஒருநாள் மட்டும் 8 பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளிலிருந்து பேருந்துகள் வரவில்லை. இதனால் மாணவ மாணவிகள் கல்லூரி நேரம் முடிந்தும் கல்லூரிக்கு வரும்போதும் மிகவும் அவதி அடைகிறார்கள்.
மேலும் அதிக வெயில் காரணமாக நடந்து செல்வதில் மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. சிலர் நடந்து செல்லும்போது மாணவிகளை கிண்டல் செய்வதால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படுகிறது. எனவே கடலூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் சிலவற்றை கல்லூரி வழியாக இயக்க வேண்டும். அப்படி இயக்கினால் கல்லூரி வழியாக பேருந்து சென்றால் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்வதில் சிரமம் இருக்காது. எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.