தமிழக சாரண இயக்கத்தினை காவிகள் கைப்பற்ற திட்டமா? கி.வீரமணி
தமிழக சாரண இயக்கத்தினை காவிகள் கைப்பற்ற திட்டமா? என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரகசிய செயல் திட்டங்களில் ஒன்று - சிறு இளைஞர்கள், மாணவர்களைப் பிடித்து யோகா உடற்பயிற்சி என்ற போர்வையில் அவர்களது மூளைக்குள் காவிச்சாயத்தை ஏற்றுவது என்பதாகும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், CATCH THEM YOUNG என்றே ஒரு இயக்கத்தைத் தங்களது ஷாகா மற்றும் முகாம்கள் மூலம் ஒரு வேலைத்திட்டமாக வைத்தே களத்தில் இறங்கியுள்ளனர்!
மதுபோதை, ஜாதி போதையை விட சிறு பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப் பாய்ச்சும் இம்முயற்சியின் ஒரு பகுதியாக, நேரிடையாக கால் ஊன்ற முடியாத பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எச்.ராஜா என்ற ஒரு பண்பற்ற அரசியல் அநாகரிகச் சொற்களை உதிர்த்தே பெரிய விளம்பரவாதியாகி விட நப்பாசைக் கொண்டுள்ள ஒருவர் - கல்வியை காவிமயமாக்க ஸ்கவுட் (SCOUT) என்ற மாணவ தொண்டு அமைப்பான சாரணர் இயக்கத்திற்குள் நுழைந்து, அதனைக் கைப்பற்றிட, தமிழக அரசு - கல்வித்துறை அமைச்சு மூலம், தலைமைக்குப் போட்டியிட ஏற்பாடாகியுள்ளது. தமிழக அரசு கல்வி அதிகாரிகளை அச்சுறுத்தி வாக்களிக்க கட்டாயப்படுத்துவது எவ்வகையில் நியாயம்?
இந்த திரைமறைவு நிகழ்ச்சியை உரிய நேரத்தில் அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது சரியான நேர சரியான அறிக்கையை வரவேற்கிறோம். அரசியல் சார்பற்ற, ஓய்வு பெற்ற மேனாள் கல்லூரி கல்வி இயக்குநர் திரு. மாரி அவர்களை வெற்றி பெறச் செய்து, கல்வியில் காவிகளின் படையெடுப்பைத் தடுத்திட அஞ்சாது, துஞ்சாது வாக்களிக்க வேண்டுகிறோம்.
இது ஒரு ஆரிய - திராவிடப்போர்! சூழ்ச்சிகள் வென்று விடாமல் உறுதியுடன் சாரணர் இயக்கத்தில் சாயமேற்படாமல் காப்பாற்ற வேண்டியது அனைவரது கடமையாகும். இவ்வாறு கூறியுள்ளார்.