Skip to main content

கோழியைக் கொன்று முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

நல்ல பாம்பு

 

பாம்பு புற்றில் முட்டை வைத்தாலும் கோழி முட்டைகளைச் சாப்பிடாது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் கடலூர் அருகே நல்ல பாம்பு ஒன்று வீடு புகுந்து கோழியைக் கொன்று முட்டைகளை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் அருகே உள்ளது திருவந்திபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்த அன்பழகன், தனது வீட்டில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார் இதில் ஒரு கோழி 15 முட்டைகளை இட்டு அடை காத்துவந்துள்ளது. தினமும் அடைகாக்கும் கோழியையும் முட்டைகளையும் அன்பழகன் அவ்வப்போது கண்காணித்து வந்துள்ளார். 

 

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று அன்பழகன் வீட்டு வளாகத்துக்குள் புகுந்து பின்னர் மோப்பம் பிடித்து முட்டைகளை அடைகாத்து இருந்த கோழி அருகே சென்று முட்டைகளைச் சாப்பிட முயன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அடைக்கோழி அந்தப் பாம்பைக் கொத்தி சண்டை செய்துள்ளது. ஒரு கட்டத்தில் பாம்பு அடைக்கோழியின் கழுத்துப் பகுதியை கொத்தி உள்ளது இதனால் பாம்பின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் உயிருக்குப் போராடி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து விட்டது கோழி.

 

பின்னர் கோழி அடைகாத்த முட்டைகளை அந்த நல்ல பாம்பு ஒவ்வொன்றாக விழுங்கிக்கொண்டு இருந்துள்ளது. கோழியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த அன்பழகன் அடைக்காக்க வைக்கப்பட்ட முட்டைகளை நல்ல பாம்பு விழுங்கிக் கொண்டு இருப்பதையும் அருகில் கோழி செத்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

 

பின்னர் இதுகுறித்து பாம்பு பிடிக்கும் செல்வா என்பவருக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அவர் உரிய உபகரணங்களுடன் வந்து முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பை லாவகமாக பிடித்துள்ளார் அடைக்கோழி மொத்தம் பதினைந்து முட்டைகள் இட்டுள்ளது. அதில் ஏழு முட்டைகளை பாம்பு விழுங்கியது தெரியவந்துள்ளது. நல்ல பாம்பை செல்வா தலைகீழாக தூக்கிப் பிடித்தபோது அதன் வயிற்றுக்குள் இருந்து முட்டைகள் ஒவ்வொன்றாக வாய் வழியாக வெளியே வந்துள்ளது இதையடுத்து பிடிபட்ட நல்ல பாம்பை அங்கிருந்து எடுத்துச் சென்று காப்புக் காட்டில் விட்டனர்.

 

http://onelink.to/nknapp

 

பொதுவாக பாம்பு முட்டைகளை விழுங்காது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அடைகாத்த கோழியைக் கொன்று முட்டைகளை விழுங்கிய நல்லபாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்