இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாகச் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். இதனை கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினர்.