Skip to main content

இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் நவீன மையம் தமிழகத்தில்  தொடக்கம்!

Published on 09/09/2024 | Edited on 09/09/2024
India Biggest Robotics Modern Center Launched in Tamil Nadu

இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் தொழில் நுட்ப மையத்தை ரூ. 5 கோடி மதிப்பீட்டில் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி, குகா(kuka)இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை குகா மையத்தின் முதன்மை மண்டல அதிகாரி ஆலன் ஃபேம், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம், ஆகியோர் தொடக்கி வைத்தனர்.  அதன் பின் பேட்டியளித்த சி.ஜ.டி.கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம் மற்றும் குகா நிறுவனத்தின் மேலாளர் ராகவன், “இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோபோடிக் பயிற்சி மையம் தமிழகத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய ரோபோடிக் லேர்னிங் சென்டர் எதற்காக ஏற்படுத்தி இருக்கிறோம் என்றால் தமிழக அரசு தமிழ்நாட்டில் நிறைய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வெளிநாடுகளில் இருந்து அழைத்து வர உள்ளார்கள். அப்படி வரும் பொழுது எல்லா தொழிற்சாலைகளிலும் ரோபோட்டிக் மிகவும் பயனுள்ளது. வருங்காலத்தில் ரோபோடிக் பொறியாளர்கள்  அதிகபேரை உருவாக்க இங்கு ஆரம்பித்திருக்கிறோம்.

மருத்துவத்துறையில் கிரிட்டிக்கல் சர்ஜரி, எக்ஸ்ரே எம்.ஆர்.ஐ.ஸ்கேன்  பிசியோதெரபி போன்றவற்றைச் சிரமமின்றி எளிதாக கையாளும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் ரோபோட் ஒரு மிஷனாக இல்லாமல் மருத்துவரின் கையாகவே இருந்து செயல்படும் ரோபோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் இந்தியாவை விட ரோபோட்டில் 30 மடங்கு வளர்ந்து இருக்கிறார்கள். இந்தியாவில் இப்பொழுதுதான் இந்த துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் நிறையப் பொருட்களை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ய முடியும். அதனால் உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருக்கும்.

1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன மிஷின் ஆகும். கார் தொழிற்சாலைகள், மருத்துவத்துறை, எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலை வாய்ப்பை எளிதாகக் கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன்களை ரோபோடிக் இல்லாமல் தயாரிக்க முடியாது. ரோபோட்டிக் வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கும் ஒரு சில வேலைகளை ரோபோடிக் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள ரோபோட்டிக் பாப்புலேஷனில் ஐந்து சதவீதம் கூட நம் நாட்டில் கிடையாது. ஆனால் இப்போது வருகின்ற காலங்களில் இந்தியா அந்த அங்காடியை பிடிக்கப்போகிறது. வேலைவாய்ப்புகள் இந்தியாவில் அதிகமாக உருவாகும்.

ஆபத்தான தொழில் மற்றும் மறுபடியும் செய்யக்கூடிய தொழிலில் மக்கள் களைப்படைந்து விடுவார்கள், பாதிக்கப்படுவார்கள். ரோபோட்டிக் அது போன்று அல்ல; இது மக்களுக்கு உதவி செய்வதற்குத்தான். நலனைப் பறிப்பதாக இருக்காது. ரோபோட்டிக்கை அசம்பல் செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ரோபோட்டிக்கை இயக்குவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே ரோபோட்டிக்கால் வேலைவாய்ப்பு அதிகமாகுமே தவிர குறையாது” என்று கூறினர்

மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் குறைந்த கட்டணத்தில் ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும் எனக் கல்லூரி தலைவர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்