நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் வாயில் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தின விழாவை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வார இறுதி நாட்கள், நாட்டின் 77வது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 11, 12, 13, 15, ஆகிய தேதிகளில் 1,100 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளது. மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், கோவை போன்ற இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. பெங்களூருவிலிருந்து பல இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.