சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று (09/08/2022) மாலை 05.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், பியானோ கலைஞர் ஸ்டீபன் தேவசி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
'தமிழ்நாட்டின் விளையாட்டுகள்' குறித்த கலை நிகழ்ச்சி செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நிகழ்த்தப்பட்டது. சங்ககால விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கண்ணாமூச்சி உள்ளிட்டவைக் குறித்த கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உடல் வித்தை விளையாட்டு, கபடி போன்ற விளையாட்டுகள் குறித்தும் கலை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.
அறிவுசார் ஆட்டமான சதுரங்க விளையாட்டு குறித்து கலை நிகழ்ச்சி மூலம் நடித்துக் காட்டப்பட்டது. கண், மனது மற்றும் கைகளை ஒருங்கிணைக்கும் பந்தாட்ட நிகழ்ச்சி நடித்துக் காட்டப்பட்டது. தமிழக விளையாட்டுகளின் பரிமாணம் மற்றும் வரலாறு குறித்த நிகழ்ச்சியை கலைஞர்கள் உருவாக்கினர். 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆடை, அலங்காரம் போன்றவற்றை நினைவுகூறும் வகையிலும் கலை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த காணொளி நிறைவு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகம் நடத்தும் முடிவை எடுத்தது குறித்து காணொளியில் இடம் பெற்றிருந்தது.