சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை 3வது முறையாக ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதுடன், 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் வழங்கினார். அப்துல் கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கணினித் துறை பேராசிரியர் முனைவர் டபிள்யூ. பி. வசந்தா கந்தசாமிக்கு வழங்கினார்.
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைச் சேர்த்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்குச் சேவை புரிந்த சிறந்த நிறுவனத்திற்கான தமிழ்நாடு அரசு விருதினை கன்னியாகுமரி சாந்தி நிலையத்திற்கு வழங்கினார். முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் கண்காணிப்பு செல்லிட செயலியை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருதினை வழங்கிடும் வகையில் மின் ஆளுமை முகமையின் இணை இயக்குநர் பெ. ரமண சரஸ்வதியிடம் வழங்கினார்.
சிறந்த மாநகராட்சிக்கான விருதை திருச்சி மாநகராட்சிக்கு வழங்கினார். 50 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை திருச்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் பெற்றுக்கொண்டனர். இதேபோன்று பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.