மணல் திருட்டைக் கண்டுக்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசின் மெத்தனபோக்கையும் கண்டித்து எட்டையாபுரம் தாலுகாவினை சார்ந்த 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுதந்திரத் தினமான இன்று கருப்புக் கொடி ஏற்றியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா கீழ்நாட்டுக்குறிச்சியில் சவுடு மண் அனுமதி பெற்று, சவுடு மண்ணை எடுக்காமல் அங்குள்ள ஆற்றுமணலை தினசரி 200 லாரிகள் மூலம் கொள்ளையடிப்பதாக எட்டையாபுரம் தாலுகாவினை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தினரிடமும், தமிழக அரசிடமும் பல்வேறு நிலைகளில் கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும் உள்ளூரை சேர்ந்த ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் பாராமுகம் காட்டி மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவளித்ததது மாவட்ட நிர்வாகம். இது குறித்து, நாம் தமிழர் கட்சியினரோ, 13-08-2019 அன்று வட்டாட்சியரிடம் மனு கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை நிறுத்த வேண்டும் இல்லையெனில் ஆகஸ்ட் 15--ல் எட்டயபுரம் தாலுகா சார்ந்த கிராமங்கள் முழுவதும் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக அறிவித்து இருந்தனர்..
அறிவித்தது போல், மணல் திருட்டை தடுத்து நிறுத்தாத மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து சுதந்திர தினமான இன்று எட்டயபுரம் தாலுகாவினை சேர்ந்த கீழ்நாட்டுகுறிச்சி, எட்டயபுரம், காஞ்சாபுரம், நடுவப்பட்டி, புதுப்பட்டி, தலைக்காட்டுபுரம், இராமனூத்து, படந்தபுளி, சிந்தலக்கரை, துரைசாமிபுரம், முத்துலாபுரம், கோட்டூர், தாப்பாத்தி, சக்கிலிபட்டி, இரண்சூர்நாயகன்பட்டி, பிதப்புரம், கசவன்குன்று, ஈராட்சி, அஞ்சுரான்பட்டி, செமபுதூர், தெற்கு சேமபுதூர், சண்முகாபுரம், வாலம்பட்டி, துரைசாமிபுரம்,கீழஈரால் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களில்கருப்பு கொடி ஏற்றி அரசிற்கு எதிராக எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். போலீசார் கருப்புக்கொடியை அகற்றினாலும் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது இப்பகுதியில்.