கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்குக் காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாகக் கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,487 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 2,500 கன அடி நீரும், முதல் கட்டமாக ஏற்கனவே திறக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கபினி அணையிலிருந்து 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2,536 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளன. மொத்தமாகக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 12 ஆயிரத்து 536 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.