பருவநிலை மாற்றம் காரணமாக கடலூரில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
காய்ச்சல் பரவல் தொடர்பாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கடலூர் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு உடனடியாக தக்க சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் மருந்து கொடுக்கும் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வில் ஈடுபட்டார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் காய்ச்சல் பரவல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நோக்கி சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் மருந்துகள் வழங்கும் இடம், சிகிச்சை அளிக்கப்படும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், காய்ச்சல் பரவல் இருக்கும் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியதோடு தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மருத்துவமனைகளை கண்காணித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.